தற்போதய அமதிக்கரங்கள் உடல் உள வலுவூட்டும் நிலையத்தின் இயக்குநர்.
மதங்கள் கடந்து மனிதத்தை நேசித்த மனிதர் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் புகழ்பூத்த கல்வியாளனும் யாழ்மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் குருவுமாகிய அருட்தந்தை ஜீவனதாஸ் பெர்னான்டோ ஆண்டகை 16.04.2019 அன்று மாரடைப்பால் மாங்குளம் அமதிக்கரங்கள் இல்லத்தில் காலமானார்.
24.09.1956 ம் ஆண்டு அனுராதபுரத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதிலேயே மன்னார் பேசாலை கிராமத்தில் குடியேறினார். பின்னர் கொழும்புத்துறையில் உள்ள புனித வளனார் குருமடத்தில் இணைந்து பாடசாலை கல்வியை நிறைவுசெய்த தந்தை ஜீவனதாஸ் அடிகளார் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவிற்கு தெரிவாகி கலைமானி பட்டம் பெற்றுக்கொண்டதுடன் கண்டி தேசிய குருமடத்தில் இறையியலில் இளமானிப்பட்டம் பெற்று 08.12.1990ம் ஆண்டு அமலமரித்தியாகிகள் சபையில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
கிளிநொச்சி அமதிபுரம் பங்கில் பங்குத்தந்தையாக தனது பணிவாழ்வை ஆரம்பித்த தந்தையவர்கள் பின்னர் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகவும் பகுதித் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து திருகோணமலை பாலையூற்று பங்கின் பங்குத்தந்தையாகவும் 2004ம் ஆண்டு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி அமலமரித்தியாகிகளால் பொறுப்பேற்கபட்டதிலிருந்து எட்டு வருடங்களாக அதன் அதிபராக பணியாற்றினார்.
அவர் சூசையப்பர் கல்லூரியின் அதிபராக பணியாற்றிய காலத்திலே கிழங்கிலங்கையில் மட்டுமன்றி இலங்கையிலேயே ஓர் புகழ்பூத்த கல்லூரியாக திகழவைத்தது மட்டுமன்றி மதங்கள் மொழிகள் கடந்து மனிதத்திற்காக உழைத்தார். மாணவர்களுடன் மிகவும் கண்டிப்புடனும் ஆசிரியர்கள் பெற்றோருடன் அன்பாகவும் சக குருக்களுடன் குதூகலமாகவும் பழகும் அருட்தந்தையின் ஆளுமை போற்றுதற்குரியது. யுத்தம் உக்கிரம் பெற்ற காலத்திலே தனது மும்மொழி ஆற்றலால் அனைவரையும் ஒன்றிணைத்து அவர் செயற்பட்ட விதம் திருகோணமலையில் அவரிற்கென்று ஓர் தனியிடத்தை பெற்றுக்கொடுத்தது. இன்றும் பல இந்து முஸ்லிம் மக்கள் இவரின் சேவையை நினைவுகூறுகின்றனர்.
கல்விப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற அருட்தந்தை ஜீவனதாஸ் 2012ம் ஆண்டிலிருந்து கிளிநொச்சியிலுள்ள அமலமரித்தியாகிகளின் OBTEC நிறுவனத்தின் இயக்குநராக போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தன்னையே அர்பணித்து செயலாற்றினார்.
2016ம் ஆண்டிலிருந்து அமலமரித்தியாகிகளின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் (CPR) இயக்குனராக இலங்கையின் வடமாகாணத்தில் பல்வேறு திட்டங்களை அமுல்ப்படுத்தி நெறிப்படுத்தினார். பின்னர் 2017ம் ஆண்டின் இறுதிப்பகுதியிலிருந்து கொக்கிளாய் பங்கின் பங்குத்தந்தையாகவும் 2018 ம் ஆண்டின் இடைப்பகுதியிலிருந்து மாங்குளம் அமதிக்கரங்கள் உடல் உள வலுவூட்டும் நிலையத்தின் இயக்குநராகவும் பணியாற்றி வந்தார்.
பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு பணித்தளங்களில் பணியாற்றி தனது அன்பான புன்னகையாலும் அரவணைப்பாலும் பல நற்பிரஜைகளை உருவாக்கிய அருட்தந்தையின் வாழ்வும் வரலாறும் இன்னும் பலவருடங்கள் வாழும்.
மதங்கள் கடந்து மனிதத்தை நேசித்த மனிதர்...!! நேற்று இறை எய்தினார்.....!!
Reviewed by Mankulam News
on
4/17/2019 08:13:00 am
Rating:
No comments: