Seo Services

வன்னியில் இடம்பெற்ற போரினால் பாதிப்புற்ற பாடசாலையில் நூலகச் செயற்படுத்துகை திட்டம்.......!!!


போரின் கொடிய தாக்கங்களிலிருந்து அத்தனை இலகுவாக விடுபட முடியாது. எனினும் அதன் தாக்கங்களின் வீதத்தினைக் குறைக்க முடியும். அதற்கு ஆகாரமூட்டல் மட்டும் போதாது. அறிவூட்டலும் அவசியம். போருக்குப் பிந்திய நற்பணியொன்று வன்னியில் நடந்தேறியுள்ளது. 'புத்தகம் தன்னால் புத்தாக்கம் கொள்வோம்' எனும் கருப்பொருளில் போரினால் பாதிப்புற்ற பாடசாலைகளில் நூலகச் செயற்பாடுகளை ஊக்குவித்து, தகுதியான நூல்கள், பிற துணைப் பொருட்கள் வழங்கி மாணவர்களுக்கும், சமூகத்தின் ஏனைய‌வர்களுக்கும் கைகொடுக்கும் திட்டமானது, 'அம்மம்மா அறக்கட்டளை' செயற்படுத்துகையில் ஆரம்பமானது. முதற்பணி ஆரம்ப நிகழ்வானது ஈழத்தின் வன்னியில் முல்லைத்தீவு மாவட்டத்திலமைந்த தேராவில் தமிழ் வித்தியாலயத்தில் 24.05.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இச்செயற்படுத்துகைக்கு சுவிட்சர்லாந்து தில்லையம்பலம் நந்தினி குடும்பத்தினர் நிதி வழங்கியிருந்தனர்.

தேராவில் தமிழ் வித்தியாலய அதிபர் பெ.பாலகிருஸ்ணன் தலைமையில் இட‌ம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சி.சுப்பிரமணியேஸ்வரன் கலந்துகொண்டார். முன்னதாக பங்கேற்பாளர்கள் வரவேற்பு இன்னிய அணிவகுப்புடன் ஆரம்பமானது. சுடரேற்றல், அகவணக்கம் என்பன முறையே இடம்பெற்றன. வரவேற்புரையினை தேராவில் தமிழ் வித்தியாலய ஆசிரியர் எம்.ருபேஸ்குமார் வழங்கினார். தலைமையுரையினைத் தொடர்ந்து இப்பணி தொடர்பான அறிமுகத்தினை யோ.புரட்சி வழங்கினார். தொடர்ந்து 'புதிய பியூனிக்ஸ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு' தலைவர் இ.பிரபாகரன் உரை நிகழ்த்தினார். எழுத்தாள‌ர்கள் சார்பில் மருத்துவ எழுத்தாளர் ஆயுள்வேத வைத்தியர் ந.சிவசுப்பிரமணியம் நூலகச் செயற்பாடுகள் பற்றி கருத்துரைத்தார். பிரதம விருந்தினரான புதுக்குடியிருப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சி.சுப்பிரமணியேஸ்வரன் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நூல்களினை கோட்டக் கல்விப் பணிப்பாளர் சி.சுப்பிரமணியேஸ்வரன், புதிய பியூனிக்ஸ் அமைப்பின் தலைவர் இ.பிரபாகரன், யோ.புரட்சி, நிகழ்வில் பங்கேற்ற பாடசாலை அதிபர்கள்  ஆகியோர், தேராவில் தமிழ் வித்தியாலய அதிபரிடம் கையளிப்புச் செய்தனர்.

தொடர்ந்து நூலக பார்வையிடலும் இடம்பெற்றது. இச்செயற்பாட்டினை கேள்வியுற்ற புதிய பியூனிக்ஸ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் இ.பிரபாகரன் அவர்கள், உலகப் புகல்பெற்ற  ஒரு தொகுதி 'பிரிட்டனிகா' கலைக்களஞ்சிய நூல்களினை நிகழ்வில் வைத்து வழங்கினார். நன்றியுரையினை ஆசிரியர் ரி.சாந்தகுமார் வழங்கினார்.

பாடசாலை மாணவர்களுக்கான  கற்றல் நூல்கள் உள்ளிட்ட அநேகமான தகுதிமிக்க நூல்கள் இன்றைய செயற்படுத்துகையில் வழங்கப்பட்டமை அநேகருக்கு பயன்மிக்க ஒன்றாகும்.









வன்னியில் இடம்பெற்ற போரினால் பாதிப்புற்ற பாடசாலையில் நூலகச் செயற்படுத்துகை திட்டம்.......!!! வன்னியில் இடம்பெற்ற  போரினால் பாதிப்புற்ற பாடசாலையில் நூலகச் செயற்படுத்துகை திட்டம்.......!!! Reviewed by Mankulam News on 5/24/2019 06:56:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.