முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் இன்று மதியம் திடீரென வைத்தியர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்கள் பலர் சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த வைத்திய நிபுணர் ஒருவரை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக திரைமறைவில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
மேலும், குறித்த வைத்திய நிபுணர் மேற்கொள்ளும் சத்திர சிகிச்சைகளுக்கான மயக்க மருந்து வழங்கப்படாமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்களுக்கு அறிவித்திருந்த நிலையில் இது தொடர்பான விசாரணகைளை மேற்கொண்டு உரிய அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர்களுக்கு கடந்த வாரம் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கமைய நாளைய தினம் மத்திய சுகாதார அமைச்சு இதற்கான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் விசாரணைகள் எதுவும் இன்றி குறித்த வைத்திய நிபுணரை வெளியேற்றும் நோக்கில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பகல் 11.30 மணிக்கு திடீரென 12.00 மணியிலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மல்லாவி, மாங்குளம் ஆகிய பிரதேசங்களிலிருந்து வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த வைத்தியாசாலையில் காணப்படுகின்ற முரண்பாடு தொடர்பில் நேற்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் முல்லைத்தீவுக்குச் சென்று இது தொடர்பில் ஆராயந்ததாகவும் அறியமுடிகின்றது.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் மருத்துவத்துறையின் வளர்ச்சியை தடுப்பதற்கும் அங்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுகின்ற உயர் வைத்திய அதிகாரியை வெளியேற்றுவதற்கும் சிலர் திரைமறைவில் தமது நடாகங்களை அரங்கேற்றி வருவதாகவும் இதற்கு ஒரு சில அதிகாரிகள் துணை நிற்பதாகவும் இவ்வாறான செய்பாடுகளால் ஏழை மக்களே பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முல்லைத்தீவில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு! அதிக சிரமத்தில் பொதுமக்கள்!!
Reviewed by Mankulam News
on
4/03/2019 07:22:00 pm
Rating:
No comments: